பலமுறை எச்சரித்த மு.க.ஸ்டாலின்..! வரிசைகட்டி சர்ச்சைகளில் சிக்கிய நாசர்; பறிபோன அமைச்சர் பதவி
CM Stalin To Reshuffle Tamil Nadu Cabinet: பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை பறித்து, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்னும் சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தகவல்.
Why Avadi Nassar Lost Minister Post: பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய அமைச்சராக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேர்கிறார். அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு இருப்பது தமிழக அரசியலில் பேச்சு பொருளாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நாசரின் பதவி பறிப்புக்கு என்ன காரணம்? நாசர் செய்த தவறுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆவடி பகுதியை சேர்ந்த சா.மு.நாசர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விசுவாசியாகவே திமுக வட்டாரத்தில் அறியப்பட்டவர். 1980-களில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்த போது இவரும் இளைஞரணியில் இருந்தார். செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்தார் நாசர். அதோடு மு.க.ஸ்டாலின் எங்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் இவரும் அவருடன் தவறாமல் சென்றுவிடுவார்.
மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்த சா.மு.நாசர்:
2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சியின் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார் சா.மு.நாசர். அதன்பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் ஆவடியில் போட்டியிட்டார். ஆனால் இவர் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவின் மஃபா பாண்டியராஜனிடம் தோற்றுப்போனார். அதன்பிறகு மீண்டும் இவருக்கு 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. இந்த முறை அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நாசர், மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: நாசர் நீக்கம்! டிஆர்பி ராஜாவுக்கு பதவி
மக்கள் பணியில் அலட்சியம் காட்டிய சா.மு.நாசர்:
அதோடு நாசருக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பால்வளத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. தொடக்கத்தில் பால்வளத்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதன்பிறகு சில மாதங்களிலேயே அலட்சியம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு பதிலாக தனியார் பால் நிறுவனங்களுக்கு அதிக அளவு பாலை விற்பனை செய்ததால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பால்பவுடரை வாங்கி ஆவின் நிறுவனம் பால் தயாரித்துள்ளதாக பேசப்படுகிறது. அதோடு பல மாவட்டங்களில் அடிக்கடி ஆவின் பால் விநியோகம் மிகவும் தாமதமானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதோடு காலை 5 மணிக்கு ஆவின் பால் விற்பனை நிலையங்களுக்கு கிடைக்க வேண்டிய பால் காலை 9 மணிக்கு மேல் கிடைத்ததாகவும் புகார் எழுந்தது.
நாசரை எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நாசரை எச்சரித்துள்ளார். இனி இதுபோன்ற புகார்கள் வராமல் பால்வளத்துறையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். இதுபோதாதென்று நாசரின் மகன் ஆசிம் ராஜா மீதும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. தந்தை அமைச்சர் என்பதால் அவர் பெயரை பயன்படுத்தி டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு பலருக்கும் தலைவலி ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் அதிரடி... அண்ணாமலை மீது அவதூறு வழக்கு!
ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலரான ஆசிம் ராஜா, அடுத்தடுத்து பல புகார்கள் எழுந்த நிலையில், மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். இதனால் முதலமைச்சர் நாசரை மீண்டும் கண்டித்துள்ளார்.
கல்லை எடுத்து தாக்கிய நாசர்:
இதெல்லாம் போதாதென்று கடந்த ஜனவரி மாதம், திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நாற்காலி எடுத்து வர தாமதமானதால் திமுக நிர்வாகி ஒருவரை கல்லை எடுத்து தாக்கினார் நாசர். இப்படி அடுக்கடுக்காக கண்முன்னே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தவரிடம் இருந்து அமைச்சர் பதவியை பறித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கட்சிக்குள் சலசலப்பு:
பல மேடைகளில், தவறு செய்வது ஆளும் கட்சி நபராக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வந்தார் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி மீது எந்த களங்கமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதால், எந்த துறையிலும் முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை பறித்து, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் முதலமைச்சர். அதோடு மேலும் சில சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதால், திமுக கட்சிக்குள் சலசலப்பு அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ