தடியடி நடத்தியது ஏன்? பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் -ஐகோர்ட்
ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் தடியடி நடத்தியது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல அவகாசம் கேட்டும், போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்க கோரியும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி கவுல்
தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆதாரங்கள் ஏதும் இன்றி விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நீதிபதி மகாதேவன் முன் வழக்கறிஞர்கள் ஆஜராகி இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்தனர். மதியம், 2.15 மணிக்கு விசாரிக்க நீதிபதி ஒப்புக் கொண்டார். அதன்படி விசாரணை நடந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், போராட்டக்காரர்கள் போர்வையில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி வன் முறையில் ஈடுபட்டதாக கூறினார். அப்போது நீதிபதி, போராட்டகார்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஏன்? வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் பாதுகாப்பை டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.