இன்று சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. அதற்க்கான காரணத்தை செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“லோக் ஆயுக்தா” சட்டம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்திளார்களிடம் பேசியதாவது:-


தமிழக சட்டப்பேரவையில் அரசின் சார்பில் “தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு 2018” கொண்டு வரப்பட்டது. “லோக் ஆயுக்தா” சட்டம் கொண்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து நான் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதனை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வந்தேன். ஆனால், அப்போதெல்லாம் “லோக்பால்” சட்ட திருத்தத்திற்காக காத்திருக்கிறோம் என காரணம் சொல்லி தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது.


தற்போது, வரும் 10 ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை அமைத்து விட்டு அறிக்கை தாருங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு, அவசர அவசரமாக லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்திருக்கிறது தமிழக அரசு. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டினேன்.


குறிப்பாக, லோக் ஆயுக்தா தலைவரை தெரிவு செய்யும் சட்ட முன்வடிவு பிரிவு 4(2) இல் முதலமைச்சர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேர் மட்டும் இடம் பெற்றிருப்பது வெளிப்படைத் தன்மைக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்காது. ஆகவே, லோக் ஆயுக்தா தலைவரை தெரிவு செய்யும் தேர்வு கமிட்டியில் மேற்கண்ட மூன்று உறுப்பினர்களோடு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும், துறையைச் சார்ந்திருக்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரி (Eminent Person) ஒருவரையும் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினேன்.


அதேபோல், லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு 3(2)(A) இல், லோக் ஆயுக்தா தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதியோ அல்லது ஊழல் தடுப்பு கொள்கை, பொது நிருவாகம், சட்டம் நிதி, விழிப்புணர்வு உள்ளிட்ட துறைகளில் 25 வருடம் அனுபவமிக்க ஒருவரை நியமிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது லோக் ஆயுக்தா அமைப்பினை அதிகாரிகள் தலைமையிலான அமைப்பாக மாற்றக்கூடிய முயற்சியாக இருப்பதால், அதற்கு கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டேன்.


லோக் ஆயுக்தாவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் மட்டும் தான் தலைவராக இருக்க வேண்டுமென்று சட்ட முன்வடிவு பிரிவு 3 (2)(A) இல் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றும், 9(2)ன் கீழ் “துணை செயலாளர்” அந்தஸ்தில் “விசாரணை இயக்குநர்” (Director of Inquiry) நியமிக்கப்பட்டு அவரே விசாரணைக் குழுவின் (Inquiry Wing) தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையும் “செயலாளர்” அந்தஸ்திற்கு உயர்த்த வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.


மிகமுக்கியமாக இந்த சட்ட முன்வடிவில், பிரிவு 13(1)ன் கீழ் எது பற்றியெல்லாம் லோக் ஆயுக்தா விசாரிக்கக் கூடாது என்றால்,


* அரசு ஒப்பந்தங்கள் பற்றிய புகார்களை விசாரிக்க முடியாது, 
* அரசில் போடப்பட்டுள்ள அப்பாயின்மென்டுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க முடியாது, 
* உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளோர் மீதான புகார்களை விசாரிக்க முடியாது என லோக் ஆயுக்தா எதற்காக அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கமே இந்த 13(1) ன் கீழ் பாழ் படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, இதனை உடனடியாக நீங்கள் நீக்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.


பொது வாழ்வில் இருப்போரின் ஊழலை ஒழிக்கும் அமைப்பாகவும், சுதந்திரமாக செயல்படக்கூடிய வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம். ஆகவே, இதில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதோடு உடனடியாக செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி, பின்னர் கலந்து பேசி ஒரு முடிவெடுக்க வேண்டுமென என தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.


ஆனால், அதற்கு அரசு செவி சாய்க்காத காரணத்தால் அதனைக் கண்டிக்கின்ற வகையிலும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிற வகையிலும் வெளிநடப்பு செய்தோம்.


இவ்வாறு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.