சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணி பதவியேற்ற நிகழ்வில் நீதிபதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதது குறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். 


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், தங்களுக்கு உரிய இடம் வழங்கவில்லை என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பிறகுதான் நீதிபதி வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி அரசமைப்பு படிநிலை முறையாக பின்பற்றப்படவில்லை என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளுக்காக நீதிபதிகளின் இருக்கை மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.