ஓ.பி.எஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக தி.மு.கவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், "ஓபிஎஸ், அவரது குடும்பத்தினர் பெயரில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கிக்குவித்துள்ளார். ஆனால் தேர்தல் வேட்புமனுக்களில் வருமானம் தொடர்பான தவறான தகவல்களை கொடுத்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 


அவரது குடும்பத்தினரிடம் சொத்துகுவிப்பு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி மனு கொடுத்துள்ளது. மனு அளித்து 3 மாதங்களாகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கோரினார். 


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிகலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனு அளித்து 3 மாதங்களாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இப்படி செய்தால் மக்களுக்கு எதன் மீது தான் நம்பிக்கை இருக்கும்?" என கேள்வி எழுப்பினர். 


அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கவே, 3 நாட்கள் கால அவகாசம் அளித்து நீதிபதிகள் வழக்கை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.