முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள், நிபுணர்கள் பரிந்துரை
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடனும், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதன் முழு தீவிரத்தில் உள்ளது. பல மாநிலங்களில் தொற்றின் அளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் போதிலும், தமிழகத்தில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை தினமும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க அரசு பல நாடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, பரவலைத் தடுக்க ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு (Lockdown) போடப்பட்டுள்ளது. ஊரடங்கிலும் மக்கள் முழு விதிமுறைகளை கடைபிடிக்காததால், அவ்வப்போது பல வித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எனினும் தொற்றின் பரவல் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடனும், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிக்க சட்டமன்ற கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்களும் ஊரடங்கை நீட்டிப்பதுதான் கொரோனா தொற்று (Coronavirus) பரவலை தடுக்க முக்கியமான வழி என்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுனர்களின் குழு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்ததாகவும், அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களும் இதற்கு ஆதரவு தெரிவித்ததாவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசியபோது, கொரோனா பரவலைத் தடுக்கவே ஊறடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று கூறினார். எனினும் சிலர், ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இதை ஒரு விடுமுறை காலமாக நினைப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று அவர் வருத்தம் தெரிவித்தார். வெறும் பேச்சில் மட்டுமே மக்களிடம் கொரோனா அச்சத்தைக் காண முடிகிறது என்றும், செயலில் அது தெரியவில்லை என்றும் முதல்வர் மேலும் கூறினார்.
மக்களின் அஜாக்கிரதையால் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும், தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால்தான் தொற்று கட்டுக்குள் வரும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகவும் முதலர் மு.க.ஸ்டாலின் குறுப்பிட்டார். இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) தெரியபடுத்தினார்.
அனைத்து கட்சி எம்.எல்.ஏ கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பாஜக தரப்பிலிருந்து நயினார் நாகேந்திரன், மற்ற கட்சிகளிலிருந்து வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், எழிலன், சதன் திருமலைக்குமார், ஜெகன்மூர்த்தி, தளி ராமச்சந்திரன், நாகை மாலி, ஜி.கே மணி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையில், வெள்ளியன்று தமிழ்நாட்டில் 36,184 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,70,988 ஐ எட்டியது.
நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 467 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,598 ஆக உயர்ந்ததாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நேற்று 24,478 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,76,761 ஆக உயர்ந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR