NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவையில் இன்று (08.01.2020) நீட் விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, நீட் விலக்குக் கோரி புதிய மசோதா நிறைவேற்றுவது உட்பட எந்த நடவடிக்கைகளையுமே எடுக்காமல், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல், தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என திமுக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் விவகாரத்தில் அதிமுக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


இந்த விவாதத்தின் போது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழகப் பொருளாளர் துரைமுருகனும் எடுத்து வைத்த விவாதங்களின் விவரம் வருமாறு:


நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 6.1.2020. கடைசித் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பாக, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. அந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறதா? அது குறித்து இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது?


ஏற்கனவே இதே சட்டமன்றத்தில், 2 மசோதாக்களை நாம் ஏகமனதாக நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அது திரும்பி வந்து விட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டு விட்டதா? அதுகுறித்து விவாதம் இந்த அவையில் பல மணிநேரம் நடந்திருக்கிறது. சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் விளக்கம் தந்துள்ளனர். நிராகரிக்கப்பட்ட அந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்டீர்களா? அது மட்டுமின்றி, நிராகரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அது குறித்த புதிய மசோதாவை மீண்டும் இந்த அவையில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசிடம் இருந்து விளக்கம் வந்த பிறகு, உடனடியாக அரசு வழக்குத் தொடுக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக ஏன் ஆவேசமாகக் கூட அவர் இங்கே பதிவு செய்திருக்கிறார்.


மீண்டும் நீட் விலக்குக் கோரும் மசோதாவை நிறைவேற்றத் தேவைப்பட்டால் சிறப்புச் சட்டமன்றத்தையே கூட்டுவோம் என்று முதலமைச்சர், இதே அவையில் பதிவு செய்திருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. முதலமைச்சர் சொன்னது போலச் சிறப்புக் கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை. இப்போது போடப்பட்டுள்ள இந்தப் புதிய வழக்கால், என்ன நடந்துவிடப் போகிறது?


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியும் முடிந்து விட்டது. இன்னும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலைதான் உள்ளது. ஆகவே இது சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் செய்யக்கூடிய மிகப் பெரிய, மாபெரும் துரோகம் என்பதை நான் இங்கே கடுமையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே இதுகுறித்து அரசு என்ன விளக்கம் தரப்போகிறது என்பதைத் தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.


தொடர்ந்து திமுக பொருளாலர் துரைமுருகன் பேசுகையில்., மாண்புமிகு அமைச்சர் விளக்கமாகச் சொல்வதில் கெட்டிக்காரர். நாங்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். முன்னாள் முதலமைச்சர் அம்மையார் இருக்கிற வரையில், நீட் தேர்வு தலை காட்டவில்லை. அவர் அதில் மிகவும் உறுதியாக இருந்தார். நான் பாராட்டுகிறேன். அது முடிந்துவிட்டது. அவர்கள் மறைந்த பின்னர்தான் இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வருகிறது. அதற்கு என்ன காரணம்? நீங்கள்தான் காரணம். இப்போது நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இப்போது ஒரு வழக்குப் போட்டுள்ளீர்கள். இந்த வழக்கின் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.


சிறுது குறுக்கீட்டை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்., மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாக அமைச்சர் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த வரையில் நீட் தேர்வு வரவில்லை. அதைத்தான் எங்கள் துணைத் தலைவர் அவர்கள் பேசும்போதும் குறிப்பிட்டு சொன்னார். முன்னாள் முதலமைச்சர் அம்மையார் இருந்த போதும் தமிழ்நாட்டிற்குள் அந்த நீட் நுழைய முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வரக்கூடாது என்று தடை உத்தரவைப் பெற்று வைத்திருந்தவர் அன்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். நீதிமன்றத்திற்குச் சென்றதைத் தவறு என நாங்கள் கூறவில்லை. அது காலத்தின் சூழ்நிலை.


அதனுடைய நாள், கெடு முடிந்துவிட்டது. கடைசி நாளுக்கு 2 நாட்கள் முன்னர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளீர்கள். அதற்கு முன்னால் எத்தனையோ முறை இதைப்பற்றி இந்த அவையில் பேசப்பட்டிருக்கிறது. பலமுறை நீங்களும், சட்டத்துறை அமைச்சரும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். முதலமைச்சரும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவோம் எனச் சொல்லி இருக்கிறார். ஏன் இடையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்கள் தேர்தல் அறிக்கையிலும் சொல்லி இருக்கிறீர்கள். பொதுக்குழுவிலும் தீர்மானம் போட்டுள்ளீர்கள். ஆனால் அவற்றில் எதையும் நீங்கள் செய்யவில்லை. வரவேற்கிறீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள்தான் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்திருக்கிறீர்கள் என்பதே உண்மை. அதைத்தான் நான் இங்கே பதிவு செய்கிறேன் என தனது விவாதங்களை எடுத்துரைத்தார்.