நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


மாணவி அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய-மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் - 9, சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது.


‘நீட்’ ரத்தாகும் அல்லது ஒராண்டுக்கு மட்டுமாவது விலக்கு கிடைக்கும் என்கிற போலியான நம்பிக்கையைத் தமிழக அரசு மாணவர்களிடையே வளர்த்து விட்டது. அதற்கு மத்திய அரசும் இணங்குவது போல நாடகமாடியது. கடைசியில் தமிழக மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டன. எனவே, தமிழகத்துக்குத் துரோகமிழைத்த அரசுகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் சட்ட நகல் எரிப்பு பேராட்டம் நடைபெறுகிறது.


அனிதாவின் குடும்பத்திற்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் ரூ. 7 இலட்சத்தை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்கொடுமைகள் நிகழ்கிறபோது மத்திய அரசின் சார்பில் சட்டப்படி வழங்கப்படும் இழப்பீடாகும். இதைத்தான் முதல்வர் அறிவித்திருப்பதாக தெரிகிறது. 


தமிழக அரசின் சார்பில் அந்தக் குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும் என்கிற இரக்கம் தமிழக முதல்வர் அவர்களிடம் இல்லையென்பது வேதனைக்குரியது. இந்த நிதி ஏழு இலட்சத்தையும் வேண்டாம் என்று அனிதா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அரசு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும், அதைப் பெரிதாகக் கருதாமல் அனிதா குடும்பத்தினர் ‘நீட் தேர்வை நடைமுறைப்படுத்தவே கூடாது; முழுமையாக அதை ரத்து செய்ய வேண்டும’; என்று வலியுறுத்துவது வரவேற்கக்கூடியதாகும்.


இந்நிலையில், நீட் தேர்வை இனி எக்காலத்திலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் சட்ட நகல் எரிப்பு பேராட்டத்தில் பங்கேற்கிறார்கள். 


இந்தப் போராட்டத்தில் கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே பெருந்திரளாய் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம். முற்போக்கு மாணவர் கழகத்தின் அழைப்பை ஏற்று மாணவச் சமூகம் வெகுண்டெழ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.