ரெட் அலர்ட் வாபஸ்... 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளவு 120 அடி ஆகும்.
சென்னை: இந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளதால், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி நதி பாயும் பகுதிகளில் மழை நீர் நிரம்பி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. இதனைதொடர்ந்து சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணை இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தென் மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதாவது மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 22,500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையில் அமைந்துள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3_வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளவு 120 அடி ஆகும்.