நெஞ்சை நிலைகுலைய வைத்த சந்தியா கொலை: சினிமா இயக்குநரை சிக்க வைத்த டாட்டூ
சந்தியா கொலை வழக்கில், அவரின் கணவருமான இயக்குநர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள வாக்குமூலம் நெஞ்சை நிலைகுலைய செய்கிறது.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சென்னைப் பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் கை மற்றும் இரண்டு கால்களும் சாக்கு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட அந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். பலரிடம் விசாரணை மேற்கொண்டார். ஆனாலும் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. கடைசியாக அந்த பெண்ணின் உடலில் இருந்த இரண்டு டாட்டூக்கள் குற்றவாளியை பிடிக்க உதவியது.
தங்கள் பெண் காணமல் போனது என புகார் தெரிவித்த குடும்பத்தாரை அழைத்து, அவர்களிடம் அந்த பெண்ணின் உடலில் இருந்த சிவன்-பார்வதி டாட்டூ மற்றும் டிராகன் டாட்டூவைக் காட்டி, அடையாளம் காட்டச் சொன்னார்கள். அப்பொழுது துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட அந்த பெண் சந்தியா என்றும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 15 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கொலை குறித்து அவரின் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆம் அப்பெண்ணை கொலை செய்தது அவரது கணவர் பாலகிருஷ்ணன் தான் என்பது தெரியவந்துள்ளது. அப்பொழுது தான் நெஞ்சை நிலைகுலைய வைக்கும் அதிர்ச்சி சம்பவத்தை அவரது கணவர் கூறினார்.
கடந்த மாதம் 19 ஆம் தேதியே சந்தியாவை கொன்றுவிட்டதாகவும், மரம் அறுக்கும் எந்திரத்தால் சந்தியாவை துண்டு துண்டாக்கி வெட்டினேன். வெட்டிய உடலை ஒரே இடத்தில் வீசினால் அடையாளம் தெரிந்து நான் மாட்டிக்கொள்ளுவேன் என்று தனித்தனி மூட்டையில் உடல் பாகங்களை கட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன் என்று பாலகிருஷ்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவரின் வாக்குமூலம் போலீசாரை மட்டுமில்லை, தமிழகத்தையே அதிர்ச்சியில் நிலைக்குலையச் செய்திருக்கிறது. மற்ற பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.