தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பாக உள்ளனரா? - மக்கள் நீதி மையம் கேள்வி
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மகளிர் பாதுகாப்பாக உள்ளனரா? என மக்கள் நீதி மையம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மகளிருக்கு எதிரான குற்றங்கள், அதிலும் பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருவதாக மக்கள் நீதிமையம் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-
தமிழகம் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத் தளத்தில், கட்டுமானங்களில் சிறப்பான இடத்தை அடைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், நம் மாநிலத்தில் மகளிர் நிலை என்ன? பாதுகாப்பும் நிம்மதியும் அவர்களுக்கு இப்போதும் எட்டாக்கனியாகவே இருப்பதைத் தமிழக அரசு உணர்ந்திருக்கிறதா?
கடந்த சில மாதங்களாக மகளிருக்கு எதிரான குற்றங்கள், அதிலும் பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் நிகழ்ந்துள்ள கொடூரத்தை உதாரணம் என்று சொல்லவேண்டி இருப்பதே நடுக்கத்தைத் தருகிறது. அதன்பிறகு குற்றவாளிகள் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளதும், விசாரணை மேற்கொள்ளப்படுவதும் வரவேற்கத்தகுந்தவை, மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பொள்ளாச்சி சம்பவத்திலும் கைதுகள் நிகழ்ந்தன, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உயர்மட்ட காவல் துறைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன, சில வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகின்றன. ஆனால், இது மட்டும் போதுமா? நீதி கிடைப்பதில் நிகழும் காலதாமதம் நீதி மறுக்கப்படுவதற்குச் சமம் அல்லவா. இவ்வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
குற்றவாளிகளுக்கு எளிதில் ஜாமீனோ, விடுதலையோ கிடைத்துவிடுவதும், புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் போராடவேண்டி இருப்பதும் எப்படி நீதியாகும்? பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது அரசாங்கத்தின் கடமை இல்லையா? குற்றவாளிகளை அடையாளம் கண்டு, விரைவாக அவர்களுக்கு, தகுந்த, கடுமையான தண்டனையை நிறைவேற்ற, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். அதுவே இத்தகைய குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்கப் பெரிதும் உதவும்.
ஒரு குற்றம் நிகழ்ந்தபின் அதற்கான தீர்வைக் காண்பது ஒரு பக்கம், அத்தகைய குற்றம் நிகழாமல் தடுப்பதும் மிகவும் அவசியம்.
மேலும் படிக்க | மக்களுக்கு அரசு துரோகம் செய்கிறது - கமல்ஹாசன் ட்வீட்!
பள்ளி - கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் மகளிர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தங்களுக்கு எந்தத் தொல்லை நேர்ந்தாலும் தொடக்கத்திலேயே அவர்கள் அக்குழுக்களை அணுக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். புகாருடன் வருபவர்களை, முன் தீர்மானத்துடன் கேள்விகள் கேட்டு மேலும் துன்புறுத்தாமல், கரிசனத்துடன் அணுகி, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவும், துணையிருக்கவும் அந்தக் குழுக்கள் உதவ வேண்டும்.
குறிப்பாக வளர் இளம் பருவத்துப் பெண் பிள்ளைகள் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டபின் அவர்களது மனநிலையை ஒருபோதும் அதற்கு முன்னர் இருந்ததைப் போல மாற்றமுடியாது. இது வருங்காலச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த மனநலத்தைக் கேள்விக்கு உட்படுத்தும். மாணவிகள் தங்கள் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவதும், அஞ்சுவதும் குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலைத் தருவிக்கும். குற்றவாளி யாராக இருந்தாலும் தப்பமுடியாது என்ற நிலை வந்தால் மட்டுமே மாணவிகள் பேசவேண்டிய இடத்தில் பேசத் துணிவார்கள், இப்படியான சீண்டலை மேற்கொள்வோரும் அஞ்சுவார்கள்.
இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருவதையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களைத் தண்டிக்கும் சவால் ஒருபுறம் இருக்க, நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகளை, முக்கியமாகத் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவை தவிர, மகளிர் நலம் என்பதன் முழுமையான அர்த்தத்தை உணர்ந்து, மருத்துவ ரீதியாக, உடல் மற்றும் மனநல ஆலோசனைகள் தக்க சமயத்தில் கிடைப்பதற்கு பள்ளி - கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.
பொள்ளாச்சி, விருதுநகர் என்ற ஊர்ப் பெயர்கள் இப்போது மிகக் கொடூரமான சம்பவங்களை அடையாளப்படுத்தப் பயன்படுவது எத்தனை பெரிய துயரம். நீதி கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் சரியாகத் தண்டிக்கப்பட்டுவிட்டால், இந்தப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். மேலும், இனியேனும் எந்த ஊரும் இப்படி அடையாளப்படுத்தப்படாமல் இருக்கவேண்டுமெனில், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். குற்றம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலை யாருக்கும் இருக்கக் கூடாது. மாறாக, குற்றம் செய்ய அஞ்ச வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே அரசு ஆதரவாக இருக்கும் என்ற உத்தரவாதம் மட்டுமே இதனைச் சாத்தியமாக்கும்.
நம் மாநிலத்தில், மகளிருக்கு நலம் சேர்க்கப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, அவற்றைப் பாராட்ட நாம் தயங்குவதில்லை; சில திட்டங்கள் இன்னும் அறிவிப்பளவிலேயே நிற்கின்றன, அவற்றைச் சுட்டிக்காட்டவும் நாம் தயங்கவில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மேலாக, மகளிர் பாதுகாப்பும் நிம்மதியும் அத்தியாவசியம் என்பதை மக்கள் நீதி மய்யம் சார்பில் மிகத் தீவிரமாக எடுத்துரைக்கிறோம். அரசாங்கம் இதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறோம். நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தகனம் செய்முன் தானம் செய்வீர்: கமல்ஹாசனின் பிறந்தநாள் கோரிக்கை...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR