அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர்!!
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் 3-வது தென் மண்டல மாநாட்டை சென்னையில் நேற்று தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.
அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் மூன்றாவது தென் மண்டல மாநாட்டை சென்னையில் சனிக்கிழமை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை.
கடந்த 2015-ம் ஆண்டு உலகமே பாராட்டும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டினை செம்மையான முறையில் நடத்திட சிஐஐ சிறப்பான பணிகளை ஆற்றியது.
தகவல் தொழில் நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை என அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியினை காணும் வகையில் முதலீட்டுக்கு தேவையான உகந்த சூழல், தமிழகத்தில் எப்போதும் திகழ்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சியை மேலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வகுத்துத் தந்த தொலைநோக்குத் திட்டம், பல்வேறு துறைகளில், நமது மாநிலம் எய்த வேண்டிய இலக்குகளையும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளது.
தொழில் துறையில் பல முக்கிய செயல் திட்டங்களை, தமிழக அரசு இப்போது வகுத்து வருகிறது. மாறி வரும் உலக பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சுமார் 267 ஏக்கர் பரப்பளவில் வான்வெளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக, விரைவில் புதிய வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை வெளியிடப்படவுள்ளது.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், மதுரை - தூத்துக்குடி தொழிற் பெருவழிச்சாலை திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்குத் தேவையான நில எடுப்பு இரண்டு மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் திட்டங்கள் அனைத்தும் உன்னிப்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவைகள் விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
அடுத்த ஆண்டில் மாநாடு: தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டை 2018-ம் ஆண்டில் மிகச் சிறப்பாக தமிழக அரசு நடத்தும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான கொள்கை அளவிலான மாற்றங்கள், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தொழில் துவங்கி நடத்தும் சூழ்நிலையை எளிமைப்படுத்துதல், மனித வள மேம்பாட்டுக்கு மேலும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றினை தமிழக அரசு தொடர்ந்து செய்யும்.
இந்த பணியினைச் செயல்படுத்துவதற்கு, தொழில்முனைவோர் மற்றும் சிஐஐ போன்ற தொழில் கூட்டமைப்புகளின் ஒத்துழைக்க வேண்டும். நாம் இணைந்த செயலாற்றும் போது, நமது மாநிலம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வேகமாக பயணிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை என்று பேசினார் முதல்வர் பழனிசாமி.