தரமான உணவை வழங்குவதில் நம்பிக்கையை இழக்கிறதா பிரபல ஹோட்டல்கள்?!
Madurai Pandian Hotel : உணவகங்களில் இப்போது வரும் செய்தியெல்லாம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவுகளை ஹோட்டல்களில் சாப்பிடவே அச்சம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு நிலைமை இருந்து வருவதே யதார்த்தம்!
அசைவ உணவு என்றால் யாருக்குத்தான் இஷ்டமிருக்காது. அப்படிப்பட்ட உணவுகளை தேடித்தேடி உண்ணும் தலைமுறை தற்போது உருவாகியிருக்கிறது. அதே வேளையில் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரமும் முக்கியமல்லவா. முக்கியமெல்லாம் இல்லை ; அதுதானே எல்லாம் என்கிறீர்களா ?
உண்மைதான். ஆனால், யதார்த்தம் என்னவென்றால் சமீப காலமாக ஹோட்டல்களில் நடக்கும் சம்பவம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. ஹோட்டல்களில் பறிமுதல் செய்யப்படும் இறைச்சிகள், உணவில் இருந்து பொறுக்கி எடுக்கப்படும் புழுக்கள், கெட்டுப்போன இறைச்சிகள், ஷவர்மா சாப்பிட்டு உயிரிழக்கும் அளவுக்கு நிகழ்ந்த சோகம் என அடுத்தடுத்து ஹோட்டல்களின் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.
மேலும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ
சாதாரண ஹோட்டல்களில் இதுபோன்ற சம்பவங்கள் என்றால்கூட கடந்துபோய் விடலாம். வாடிக்கையாளர்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பிரபல ஹோட்டல்களே இந்த குற்றச்சாட்டுகளில் சிக்குவதால் அசைவ உணவகத்தை வெளியில் சாப்பிடுவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சமீபத்திய உதாரணமாக தற்போது திருவண்ணாமலையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை பாண்டியன் அசைவ உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு பின்னர் வீட்டிற்கு காடை கறியை பார்சல் வாங்கி சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரித்துச் சாப்பிடும் போது காடைக் கறியில் 10க்கும் மேற்பட்ட புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் காடை கறி பார்சலை மதுரை பாண்டியன் அசைவ உணவகத்தின் உரிமையாளிடம் நேரில் வந்து காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு கடை உரிமையாளர் முறையாக பதில் அளிக்காததால் உடனடியாக விநாயகம், திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் ஆரணி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் மதுரை பாண்டியன் அசைவ உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு காடைக் கறியின் மாதிரியை எடுத்து சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே ஆரணி நகரில் செயல்பட்டு வரும் 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் பிரியாணி கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு 12 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் மதுரை பாண்டியன் அசைவ உணவகத்தில் காடைக் கறியில் புழு இருந்த சம்பவம் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆரணி வருகை தரும் பொதுமக்கள் ஓட்டலில் சாப்பிடுவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முறையாக உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு இது போன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தரமான உணவை ஒரு ஹோட்டலிடம் இருந்து எதிர்பார்ப்பதைவிட வேறு என்ன நியாயமான கோரிக்கை பொதுமக்களுக்கு இருந்துவிடப்போகிறது?!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ