என் வெற்றி உறுதி எனத் தெரிந்தே தேர்தல் ரத்து- தினகரன்
ஆர்கேநகரில் நான் வெற்றி பெறுவேன் என உறுதியாகத் தெரிந்ததால்தான் தேர்தலை ரத்து செய்துள்ளனர் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்கேநகரில் ஏப்ரல் 12-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.
இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பிறகு அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
"ஆர்கேநகர் தொகுதியில் 70 சதவீதத்துக்கு மேலான பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டேன். நான் வெற்றி பெறுவேன் என்பது உறுதியாகத் தெரிந்ததால் தேர்தலை நிறுத்த பலர் முயற்சி மேற்கொண்டனர். அதிகாரம் இருப்பதால் ஆணையம் தேர்தலை நிறுத்தி உள்ளது. பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. யாரும் குறுக்கே நிற்கவில்லை. இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நிறுத்தியுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க ஆணையத்திடம் மீண்டும் கோருவோம். தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த அவசியம் என்ன, விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றியதாகக் கூறுவதில் உண்மையில்லை. அதிமுகவை அழிக்க இன்னும் சிலர் சதி செய்கின்றனர். எனது வெற்றி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே எப்போது தேர்தல் வைத்தாலும் என் வெற்றியைத் தடுக்க முடியாது என்றார்.