விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


உலக வரலாற்றில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள் ஏராளமுண்டு. ஆனால், இதுவரை நடந்திராத இனப்படுகொலையைச் சிங்கள அரசு தனது அரசதிகாரத்தின் மூலமாகக் கடந்த 2009-ம் ஆண்டு நிறைவேற்றி தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை உலக வல்லாதிக்கத்தின் துணையோடு அழித்து முடித்தது. 


ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதில் பெருங்காயமாகத் தேங்கிவிட்ட ஈழத்தின் அழிவு இன்னும் வடுக்களாக, வலிகளாக மிஞ்சி உலகத் தமிழினத்தை ஆழ்ந்தக் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தி வீழ்த்திப் போட்டிருக்கிறது. நம் கைக்கெட்டிய தொலைவில் இருக்கிற ஈழத்தீவில் நடந்த தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நம் கண்முன்னாலேயே அழித்துச் சிதைத்து முடிக்கப்பட்டதன் துயர் ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் பெரும் கனலாக எரிந்து கொண்டிருக்கிறது.


10 ஆண்டுகள் கடந்தாலும் நினைக்க நினைக்கத் தோல்வியின் வலி நம்மை வருத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த மே மாதத்தில்தான் 2009-ம் ஆண்டில் இலட்சக்கணக்கான தமிழர்கள் தாயக விடுதலைப்போரில் மாண்டார்கள். சிங்களப் பேரினவாத அரசாங்கம் உலக வல்லாதிக்க நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரை அழித்து முடித்தார்கள். 


ஏறக்குறைய 10 கோடித் தமிழர்கள் தங்களது தாய் நாடென இந்தியாவினைக் கருதி வாக்குச்செலுத்தி வரிசெலுத்தி வாழ்ந்த வருகின்ற சூழலில் இந்தியப் பெருந்தேசத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத கரங்களில் தமிழர்கள் சிக்குண்டு கொல்லப்பட்டு உலகமெங்கும் ஏதிலிகளாக, நாடற்ற அனாதைகளாகத் துரத்தி அடிக்கப்பட்ட வரலாறு எதன்பொருட்டும் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது.


வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கையளவுக்குக்கூடச் சொந்த நாடில்லை என்பது தமிழரின் இறையாண்மை உணர்விற்கு எதிரானதாகும். அப்படி உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அழிக்கின்ற அளவுக்கு என்ன பயங்கரவாத கோரிக்கையினைத் தமிழர்கள் முன்வைத்தார்கள்? இப்பூமிப்பந்தில் வாழுகின்ற எல்லா மனிதர்களையும் போலச் சகலவிதமான உரிமைகளோடு வசிக்க, வாழ ஒரு நாடுதான் கேட்டார்கள். 


சிங்கள அரசப் பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டுத் தமிழர்கள் தங்களது வாழ்க்கையினை ஒரு அடிமை தேசிய இனமாகத்தான் கடத்த வேண்டுமா என்கின்ற உலக மானுடத்தின் முன்னால் வைக்கப்படும் வினாவிற்கு இதுநாள்வரை விடையில்லை.


தனது உதிரச் சகோதரிகள் நிர்வாணமாக ஈழத்து வீதிகளில் சிங்களக் காடையர்களால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் குருதி வடிய கொலைசெய்யப்பட்டு வீழ்ந்தநொடிகளில் அவர்களது ஆழ்மனம் நம்மைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய தவிப்பின் வலி தமிழன் ஒவ்வொருவரின் உயிருக்குள்ளும் விடுதலைதாகமாய் மிஞ்சிக் கிடக்கிறது.