முடங்கிய ஏர்செல் சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ஏர்செல் நிறுவன சேவை கடந்த இரண்டு நாட்களாக முடங்கியுள்ளதாக கூறி கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜியோவில் அதிரடி வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற சேவை நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் எனும் மலேசிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடன் நெருக்கடியில் சிக்கிய ஏர்செல் நிறுவனத்தின் சேவையைத் தொடர்வதற்காகப் பல கோடி ரூபாயை முதலீடு செய்தார் அந்நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன்.


அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போனதால், தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவித்து, சேவையை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி, ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வருகின்ற கோடிக்கணக்கான மக்களும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், எந்த முன்னறிவிப்பும் தரப்படாமல், ஏர்செல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன


அதை தொடர்ந்து, தமிழகத்தில் ஏர்செல் நிறுவன சேவை முடங்கியுள்ளதாக கூறி  கோவை, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி உட்பட பல பகுதிகளில் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், முடங்கிய ஏர்செல் சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என தென் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முடங்கியுள்ள சேவை சரியாக 4 நாட்கள் ஆகும். வேறு நிறுவனங்களுக்கு மாற குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு விரைவில் மாற்றிக் கொள்வதற்கான போர்ட் எண் கிடைக்கும். ஏர்செல் நிறுவனம் திவால் என்பது முழுவதுமான உண்மை கிடையாது. கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், ஏர்செல் நிறுவனம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.