`ஏர்செல்` நிறுவனத்தின் மீது உயர்நீதிமன்றத்தில் புகார்!
அனைத்து வாடிக்கையாளர்களும் எம்என்பி சேவை பெறும் வரை ஏர்செல் தனது சேவையை தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு!
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக மார்ச் 1 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
ஜியோவின் வருகையை தொடர்ந்து பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் அளவுக்கு மீறிய நஷ்டம் காரணமாகவும், கடன் சுமையாலும் தத்தளித்து வந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், அனைத்து வாடிக்கையாளர்களும் எம்.என்.பி சேவையை பெறும்வரை ஏர்செல் நிறுவனம் சேவையை தொடர டிராய் உத்தரவிடக்கோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் மத்திய அரசு, டிராய்-க்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மார்ச் 15-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.