14:50 22-07-2019
இந்தியாவின் மற்றொரு சாதனையான சந்திராயன்-2 விண்கலம் மேகங்களை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது விண்ணில். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து நிலவில் தரையிறங்கி தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வந்தனர். இதற்கான பணிகளானது கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது.


இதையடுத்து, கடந்த 15 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது.


தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில், இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்கியது. 


சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தது என நேற்று இஸ்ரோ அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


மேலும், விண்கலத்தின் பயண நாட்கள் 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும். 


இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த சந்திராயன்-2 விண்கலம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது.