நாடு முழுவதும் அதிவேக 5ஜி சேவையை சீன அறிமுகப்படுத்தியுள்ளது
அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளை அடுத்து 5ஜி சேவை வழங்கும் நாடுகள் பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது.
ஹாங்காங்: சீன நாட்டின் மூன்று அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான சேவைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தி உள்ளனர்.சீனா மொபைல் (CHL), சீனா டெலிகாம் (CHA) மற்றும் சீனா யூனிகாம் (CHU) என மூன்று கம்பனியும் முதற்கட்டமாக சீனாவின் 50 நகரங்களில் 5-ஜி சேவையை 128 யுவான் ($18) மதிப்பில் மாதத்திற்கு 30ஜிபி தரவுக்கு வழங்குகின்றன. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1,272.69 ஆகும். சீன இணைய பயனர்களுக்கு 5-ஜி அதிவேக சேவையை அளிக்கும்.
அதேபோல ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தின. இதனையடுத்து தற்போது 5ஜி சேவை வழங்கும் நாடுகள் பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது.
உலகின் மற்ற நாடுகளை விட சீனாவில் மொபைல் இணைய பயனர்கள் அதிகம் உள்ளனர். சுமார் 850 மில்லியன் மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று ஜின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் சீனாவில் 110 மில்லியன் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்றும், அது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதமாக இருக்கும் என்றும் ஜெஃப்பெரிஸின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தென் கொரியா தனது 5 ஜி நெட்வொர்க் சேவையை ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த நாட்டின் 5ஜி சேவையை பயன்படுத்துவோர் 3 சதவீதமாக உள்ளனர் என்று ஜெஃப்பெரிஸ் தெரிவித்துள்ளார்.