சென்னை ஐகோர்ட்டில் ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் பாலாஜி என்பவர் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், ‘சில தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் எங்கள் நிறுவனத்தின் சேவையை தடையின்றி தொடர முடியவில்லை. இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் எங்களின் அலுவலகங்களின் முன்பாக கூடி பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21, 28-ந்தேதிகளிலும், மார்ச் 5, 6-ந்தேதிகளிலும் தொடர்ச்சியாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.


மேலும், ‘பயத்தில் ஊழியர்கள் வேலைக்கு வரமறுப்பதால் எங்கள் நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே எங்களது அனைத்து அலுவலகங்களுக்கும் போதிய போலீசாரை நியமித்து, பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை நேற்று பிற்பகலில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் டி.ராஜா, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து ஏர்செல் அலுவலகங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதேபோல, சென்னையில் போலீஸ் கமிஷனரும் உத்தரவிட்டுள்ளார்’ என்று கூறி அந்த ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.