2021-ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் முதல் இந்தியரை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி.யில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே.சிவன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவிக்கையில்., ஏழைநாடு என பலரால் விமர்சிக்கப்பட்ட இந்தியா ரிமோட் மூலம் இயங்கும் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.


நமது பிரச்சனைகளுக்கு நாம் தான் தீர்வு காண வேண்டும். மகாத்மா காந்தி  குறிப்பிட்டதைப்போல், நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாணவர்களான நீங்கள் முன்வர வேண்டும்.


உங்களின் நோக்கங்களும், கனவுகளும் உங்களை உறங்க விடாமல் செய்ய வேண்டும் என அப்துல் கலாம் சுட்டிக் காட்டினார். உயர்ந்த தலைவர்களை உங்களது ஊக்கசக்தியாக பின்பற்றுங்கள். ஆனால், அவர்கள் செய்தவற்றையே பின்பற்றாமல் உங்களுக்கென்ற தனித்தன்மைமிக்க அடிப்படை தீர்வுகளுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.


அப்துல் கலாம் போல் நீங்கள் ஆக வேண்டும் என்றால் அவரது சிகை அலங்காரத்தை மட்டும் பின்பற்றாமல் அவரது நோக்கங்களையும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், எதற்கும் முயற்சிப்பதற்கான வாய்ப்பை பெறாமல் வாழ்க்கையில் சிறப்பான எதையும் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைக்காது. பன்முகம் கொண்ட சவால்களை சந்திக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதன்மூலம் சிக்கலான இடங்கள் எது? என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.


பல கண்டுபிடிப்புகள் மிக அதிகமான சிரமங்கள் மற்றும் தோல்விகளுக்கு பின்னரே வெற்றி அடைந்துள்ளன. மின்சார பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை முறை தோல்வி அடைந்தார்.  விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி வைக்கும் வாகனத்தை வெற்றிகரமாக ஏவும் முயற்சியில் இஸ்ரோ எத்தனை முறை தோல்வி அடைந்துள்ளது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


சந்திரயான் 2 விண்வெளி பயனத்தின் ஒருகட்டமாக விக்ரம் லேண்டரை நிலவுக்குள் தரையிறக்கும் முயற்சி நாம் திட்டமிட்டதைப்போல் நடைபெறவில்லை, அதற்காக நாம் ‘ககன்யான்’ திட்டத்தை கைவிட்டு விடப்போவதில்லை. சந்திரயான் 2 திட்டத்தின்படி அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கருவி இன்னும் ஏழரை ஆண்டுகள்வரை நமக்கு தகவல்களை அனுப்பி வைக்கும். விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் தானியங்கி விண்வெளி ஓடத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இரண்டாவது தானியங்கி விண்வெளி ஓடத்தை 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நமது சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்போம். இந்த இலக்கை நோக்கித்தான் இஸ்ரோ தற்போது பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.