கஜா புயல் ஸ்ரீஹரிகோட்டா நோக்கி மீண்டும் திசைமாறினால் மட்டுமே செயற்கைக்கோள் ஏவுவது தாமதமகலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 


இந்த நிலையில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய செயற்கைக்கோள் நிறுவனம் இஸ்ரோ தெரிவித்திருந்தது. கஜா புயல் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்ற தகவலை அடுத்து செயற்கைக்கோள் ஏவப்படும் நேரம் மாற்றப்படும் என வதந்திகள் பரவிவந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இஸ்ரோ.


இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் மண்டபத்தில் வேதபண்டிதர்கள் மூலம் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவன், இந்தியாவின் பெரிய ராக்கெட்டான GSLV MK3 T2 மூலம், GSAT-29 செயற்கைக்கோள் நாளை மாலை 5.08 மணிக்கு  திட்டமிட்டபடி ஏவப்படும் என்று தெரிவித்தார். கஜா புயல் ஸ்ரீஹரிகோட்டா நோக்கி மீண்டும் திசைமாறினால் மட்டுமே செயற்கைக்கோள் ஏவுவது தாமதமகலாம் என்றும் கூறினார். மேலும் 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் GSAT-29, MK3 எடுத்துச்செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.