பாடகர் முகமது ரஃபியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகிள் டூடுல்!
பிரபல பின்னணி பாடகர் முகமது ரஃபியின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள் கூகுள் டூடுல்.
பிரபல இந்தி பின்னணி பாடகர் முகம்மது ரஃபி. அவர் 1924-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மஜிதா அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். ரஃபி தனது ஏழு வயதிலிருந்தே பாட்டு பாட தொடங்கிவிட்டார்.
அப்போதே சிறப்பாக பாடுவார். 1941-ல் ஷ்யாம் சுந்தர் இயக்கத்தில் முதன்முதலாக குல் பாலோச் என்ற பஞ்சாபி திரைப்படத்துக்கு பின்னணி பாடினார். அதே ஆண்டு அகில இந்திய வானொலி நிலையத்தின் லாகூர் ஸ்டேஷனில் பாட அழைக்கப்பட்டார். ரஃபியின் குடும்ப நண்பரும், அவரது சகோதரியின் கணவருமான அப்துல் ஹமீத், இவரது திறமையை உணர்ந்து, 1944-ம் ஆண்டு மும்பைக்கு அழைத்துவந்தார். உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசை கற்றார்.
1945-ல் முதன்முதலாக ‘கோன் கி கோரி’ என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். இந்தி தவிர, அசாமி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி உட்பட 14 இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பாரசீகம், ஸ்பானிஷ், டச் என பல வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார். கஜல், பஜன், தேசபக்திப் பாடல் என ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். பல மொழி இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.
சுமார் 25 நடிகர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். பின்னணி பாடும்போது நடிப்பவரின் குரலுக்கு ஏற்பத் தன் குரலை மாற்றிப் பாடுவார். இவரது பாட்டைக் கேட்டதுமே, அது எந்த ஹீரோவின் பாட்டு என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு குரலை தத்ரூபமாக குரலை மாற்றி பாடும் வல்லமை பெற்றவர், முகமது ரஃபி.
1940 - 1980 இடையே 25 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை பிலிம்பேர் விருதுகள், ஒரு தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். பக்திப் பாடல்களை மனமுருகப் பாடுவார். இவர் பாடிய ராமன் பாடல்கள் பிரசித்தமானவை.
பிரபலமான அனைத்து இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்பட பின்னணி உலகில் தனது இனிய குரலால் ஆதிக்கம் செலுத்தி, தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த முகமது ரஃபி, 1980-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, தனது 56-வது வயதில் மறைந்தார்.