சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி - ISRO சிவன்!
சந்திரயான் 2 திட்டத்தினை தொடர்ந்து சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!
சந்திரயான் 2 திட்டத்தினை தொடர்ந்து சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ISRO தலைவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் சந்திரயான் 2-ல் லேண்டர் நிலவின் பரப்பில் வேகமாக மோதியதால் லேண்டர் தரையிறக்க முடியவில்லை. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனை பாராட்டுகிறோம்.
சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும், அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல் தரவுகளை அனுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போல் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும், தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரம் தொடங்கும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ரஸ்யா செல்வர் என கூறப்படுகிறது.
ககன்யான் (Gaganyaan) என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது GSLV மார்க் III மூலம் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18, 2014-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்ககது.
முன்னதாக ககன்யான் திட்டம் குறித்து திருவனந்தபுரத்தில் பேசிய ISRO தலைவர் சிவன், ககன்யான் திட்டத்தில் மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பூமிக்கு பத்திரமாக கொண்டு வருவதே இலக்கு என்றார். இதற்கு முன்னோட்டமாக ரோபோ அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.