லண்டனில் புதிய ஃபேஸ்புக் நிறுவனம்!

ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது புதிய நிறுவனத்தை லண்டனில் பிரம்மாண்டமாக திறக்கவுள்ளது.
உலக அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் ஃபேஸ்புக் இணையதளத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனம், 2,000 ஊழியர்களுடன் 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகின் சிறந்த 100 இணையதளங்களுள் ஒன்று என்ற விருதை கடந்த 2007ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் பெற்றது.
கனடா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் ஃபேஸ்புக் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன. அதேசமயம் சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள், ஃபேஸ்புக் இணையதளத்திற்கு தடை விதித்துள்ளன. அத்துடன் 50% பிரிட்டன் கம்பெனிகளில் வேலை நேரத்தில் ஃபேஸ்புக் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, லண்டனில் பிரம்மாண்டமாக புதிய ஃபேஸ்புக் நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு தொடங்கப்படும் முதல் நாளே 800 பணியாட்களுடன் இந்த நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டன் அரசுடன் அடிப்படையில் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் இங்கு 2,300 பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஃபேஸ்புக்கின் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் இணையதள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.