புதுடெல்லி: ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி இலவச சேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வோடாபோன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் தனது இந்திய பிரிவை ஐடியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 


சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த முயற்சி நடப்பதாக வோடாபோன் தெரிவித்துள்ளது. 


மேலும், வோடாபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-


ஐடியா நிறுவனத்துடன் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளுடனும் வோடபோன் நிறுவன பங்குகள் இணைக்கப்படும். அதே சமயம் இன்டஸ் டவர்ஸ் பங்குகள் மட்டும் இணைக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது. 


இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முதலிடத்தை பிடிக்கும் முயற்சியில்தான் இந்த நடவடிக்கையை வோடாபோன் நிறுவனம் மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஏர்டெல் நிறுவனம் 26 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 


வோடாபோன் நிறுவனம் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் 2-வது இடத்திலும், ஐடியா 19 கோடி வாடிக்கையாளர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன. மேலும், 2018-19 நிதியாண்டுக்குள்  சந்தையின் மொத்த வருவாயில் ஏர்டெல் 33 சதவீத பங்குகளுடனும், ஜியோ 13 சதவீத பங்குகளுடனும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


இதே காலத்தில் வோடாபோன் மற்றும் ஐடியாவின் மொத்த வருவாய் பங்களிப்பு 43 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அமையும்பட்சத்தில் தொலைத்தொடர்பு சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.