விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் நிலை என்ன? சிவன்
2022ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோவின் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி: 2018 சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி, 2022ல் இந்தியாவும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் என்று கூறினார். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. அதே போன்று இந்தியாவும் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் அடிப்படை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இனி ககன்யான் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளம் உலக அளவில் மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு செல்லும். ககன்யான் விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் விண்கலத்துடன் 3 விண்வெளி வீரர்களுக்கான பகுதியும் மற்றொரு ஆய்வுப் பகுதியும் இணைக்கப்படும். இந்த மூன்றும் அதிநவீன ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த ராக்கெட் ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 300-400 கி.மீ தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும். இந்திய விண்வெளி வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வார்கள்.