ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் வழக்கு: திமுக மேல்முறையீடு!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று கூறி கடந்த ஏப்ரல்-27ம் தேதி வழக்கினை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து தி.மு.க தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கோரி ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.