முன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் போட்ட பதிவை தாம் தவறாக பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக அனைத்து பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து அவர் மீது தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


இதையடுத்து எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 


அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


எனவே, அவரை கைது செய்ய தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது. அதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது. 


ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது, அவருக்கு முன் ஜாமீன் வழங்க பல பெண் பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


எஸ்.வி.சேகர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், என்ன விசாரணை நடந்துள்ளது எனவும் மனுதாரர்கள் தரப்பில் காவல்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணை நடைபெற்று வருவதாகவும், அசல் பதிவை கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 


அப்போது, இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும் போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்று நீதிபதி எஸ்.ராமத்திலகம் கேள்வி எழுப்பினார். 


ஊடகத்தினரை கைது செய்யும்போது, சேகர் மீது ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல்  வழக்கினை ஒத்திவைத்தனர்.