#கர்நாடக: தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா-வலுக்கும் எதிர்ப்பு!
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டமன்றத்தில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விராஜ்பேட்டையில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் சட்டப்பேரவைக்கு போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் ஆவார்.
இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பிய மஜத தலைவர் தேவகவுடா...!
நாளை கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், 8 முறை வெற்றி பெற்ற MLA இருக்கும்போது, 3 முறை மட்டுமே வெற்றி பெற்றவரை இடைக்கால சபாநாயகராக நியமித்திருப்பது முறையல்ல என்றார்.
மேலும், தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னணி தலைவர் சிங்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மரபுப்படி சட்டமன்ற மூத்த உறுப்பினரை தான் தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் ஆனால் பாஜக இதில் மரபுகளை மீறியுள்ளதாக குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து நாளை உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்ட கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு மற்றும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடவுள்ளது.