பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பணம்: பிரதமர் அலுவலகம் விளக்கம்!
பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்பது குறித்து பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, கறுப்புப் பணத்தை மீட்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் மோகன் குமார் சர்மா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு விண்ணப்பத்தை அளித்தார்.
அதில், நரேந்திர மோடி மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் எப்போது போடப்படும்? என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி? என்றும் அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.
இதுகுறித்து தலைமை தகவல் ஆணையாளர் ஆர்.கே.மாத்தூர் முன்பு விசாரணை நடந்தது. அப்போது, பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ரிசர்வ் வங்கியில் இருந்தும் தனக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்று மோகன் குமார் சர்மா கூறினார்.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது...!
பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 'தகவல் ' என்பதன் கீழ் இடம் பெறவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 2-ன் கீழ் ஆவணங்கள், மின்னஞ்சல், பத்திரிகை குறிப்புகள் மின்னணு வடிவத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
எனவே, அவற்றுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன என்றார்.