முதலமைச்சரை தமிழில் மொழிபெயர்க்க அழைத்த கிரண்பேடி: பரபரப்பு!
தமது ஆங்கில பேச்சை தமிழில் மொழிபெயர்க்க ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது!
புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 53வது கம்பன் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டனர்.
கம்பன் விழா மேடையில், பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தான் பேசும் ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ய, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அழைத்தார்.
நாராயணசாமியும், எந்த தயக்கமும் இன்றி கிரண்பேடிக்கு அருகில் சென்று அவர் பேசுவதை மொழிபெயர்க்கத் தயாரானார். பின்னர் முதலமைச்சர் உரையை மொழிபெயர்த்தார். தனது பேச்சை முதன்முதலாக மொழிபெயர்த்த நாராயணசாமிக்கு கிரண்பேடி மேடையில் நன்றி கூறினார்.
ஏற்கனவே இரண்டு பேருக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த அழைப்பு விழாவில் கூடி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இதையடுத்து, விழாவில் கம்பராமாயணப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.