சென்னை: தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எழுப்ப தி.மு.க. தயாராக இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 8-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெற்றது.


அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ந் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்து முடிந்தது.


இதை தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ந் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார்.


இடையில், ஜூன் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!!