திராவிடம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது: தினகரன்!
திராவிடத்தைப் புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இதனால் இரு அணிகளாக இருந்த நேரத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் குக்கர் சின்னத்தையும் அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
டெல்லி உயர்நீதி மன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 9-ல் வெளியானது. அதில் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதை தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை தினகரன் தொடங்கினார். இதன் கொடி கருப்பு, வெள்ளை, சிகப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்து காணப்படுகிறது
இந்நிலையில், டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த நாஞ்சில் சம்பத், மதுரை மேலூரில் தினகரன் நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார். இந்த நிலையில், அரசியலிருந்து விலகுவதாக இன்று நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத், இலக்கிய மேடைகளில் தன்னைக் காணலாம் என்றும் கூறினார்.
நாஞ்சில் சம்பத் விலகல்குறித்து சென்னையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்:_
திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லாதது போல் பேசுகிறார். எனவே திராவிடம் பேசி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாஞ்சில் விலகியது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் பெயரால் நாங்கள் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியே, ஜெயலலிதாவுக்கு `சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தார்.
என்னைவிட வயதில் மூத்தவர் நாஞ்சில் சம்பத். அவர், அண்ணா மற்றும் பெரியாரைப் பார்த்திருக்கலாம். அவர், தி.மு.க மற்றும் ம.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்திருக்கிறார். அதன்பின், ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் வந்து இணைந்தார்.
தற்போது, திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால் அவர் விலகியதால் யாருக்கும் இழப்பில்லை. தமிழிசையை விமர்சித்து குறித்து நான் கேட்டதிலிருந்து நாஞ்சில் என்னிடம் சரியாக பேசுவதில்லை. கட்சியின் பெயரை காரணமாக கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம் அளிக்கிறது.
கட்சியின் பெயரில் திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் திராவிடம் இருந்தது, அவை எங்களுக்கு கிடைக்கவில்லை. குக்கர் சின்னம் கிடைக்க எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு இடைக்கால ஏற்பாடுதான்.
மேலும் அவர், அதிமுகவின் கொடிக்கும் எங்கள் கொடிக்கும் சம்பந்தமில்லை என்றுன். திமுகவினர் கொடியில் கூடதான் கருப்பு, சிகப்பு உள்ளது. அதற்காக அந்த இரு கொடிகளும் ஒன்று என்று சொல்லிவிடமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.