#Sterlite மீண்டும் இயங்காமல் இருக்க நடவடிக்கை: சந்தீப் நந்தூரி!
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்!
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாள் போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். 100-க்கு மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் நிலவரம் குறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது,
தூத்துக்குடியில் இன்று வழக்கம் போல் கடைகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் மதுரை, நெல்லை, குமரிக்கு செல்கின்றன.
தனியார் பஸ்களும் படிப்படியாக இயக்கப்படுகின்றன. மினி பஸ்கள் இயக்கப்படுவதில் பிரச்னை உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலைக்குள் அனைத்து மினி பஸ்களும் இயக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இணைய சேவை ஐகோர்ட் உத்தரவுப்படி, நெல்லை, குமரியில் இணைய சேவை வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில், பதற்றம் நிலவுகிறது. சூழ்நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதால், முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். முக்கிய நகர் பகுதிகளில் இன்னும் லேசான பதற்றம் நிலவுகிறது. இதுவரை 52 பேருக்கு 1 கோடியே 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்