மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் அவர்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளி கல்வித்துறை புகுத்தவுள்ளது குறிப்பிடத்தக்ககது.


தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதேவேலையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துசேர்ந்துவிடும் படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.