மேலும் 2 பேரை காவு வாங்கிய நிபா வைரஸ்: எண்ணிக்கை 16-யை எட்டியது!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது!
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதையடுத்து, தற்போது கேரளா கோழிக்கோடு மாவட்டத்தைசேர்ந்த மதுச்சூதனன் (55 வயது) மற்றும் அதேபோல், முக்கம் பகுதியைசேர்ந்த அகில் (வயது 28) என்ற இளைஞரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிபா வைரஸ் பாதிப்புக்குரிய சந்தேகத்துடன் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, கேரளாவில் ஒருவர் 18 நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டதாக ''நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி'' தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.