உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில அரசு மும்முரமாக செயல் பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி-யில் படாவுன் நகரத்தை ஒட்டியுள்ள துக்ரைய்யா கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. கிராம மக்கள் அம்பேத்கர் சிலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று படாவுன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.


இந்நிலையில், சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று ஆக்ராவிலிருந்து துக்ரைய்யா கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிலையைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் நீல நிறமாக இருந்த அம்பேத்கரின் சிலை முழுவதும் காவி நிறத்தில் இருந்தது. அம்பேத்கரின் கோட்டுக்கும் காவி வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. 


கழுத்திலும் காவி நிற மாலை போடப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசுப் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகள், பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டது. 


லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவருக்கும் காவி வர்ணம் பூசி சர்ச்சையை ஏற்படுத்தினர். தற்போது அம்பேத்கர் சிலைக்கு காவி வண்ணம் பூசி அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது யோகி தலைமையிலான அரசு!