காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர், வாட்டாள் நாகராஜ் தலைமையில் தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.


இது குறித்து அவர் கூறும்போது:- முழுஅடைப்பு போராட்டம் நடத்த எங்களுக்கு எண்ணம் இல்லை, தமிழக போராட்டம் எங்களை தூண்டியது என வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்க முயன்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை நுழைய விடமாட்டோம் என வட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


மேலும் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக செயல்பாடுகளை கண்டித்தும் வருகின்ற 12ம்தேதி கர்நாடகவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.


இந்த எல்லை அடைப்பு போராட்டத்தை அடுத்து தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள்ளும் கர்நாடக வாகனங்கள் தமிழகத்துக்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.