தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரும் மனு நிராகரிப்பு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரும் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.
10:18 23-04-2018
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 காட்சிகள் கொடுத்த தீர்மானத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதையடுத்து, வெங்கையா நாயுடு நேற்று டெல்லியில் தீபக் மிஸ்ராவி பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து ஆலோசனை நடத்தும் பணியை தொடங்கினார்.
முதலில், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், மாநிலங்களவை செயலக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
நோட்டீஸ் குறித்து, மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத் துறை செயலர் பி.கே. மல்கோத்ரா ஆகியோருடன் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை பேசினார்.
மாநிலங்களவை செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடனும் நாயுடு ஆலோசனை நடத்தினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரன் ஆகியோருடனும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸ் குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.