ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகப்பாக உள்ளது -அல்போன்ஸ்!
ஆதார் அட்டைக்காக பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பயோ மெட்ரிக் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்!
ஆதார் அட்டை விவரங்கள் பாதுகாப்பின்றி உள்ளதாக அமெரிக்க இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியை, இந்திய தனிநபர் அடையாள ஆணையம் முற்றிலும் மறுத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ZDNet என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியில், ஆதார் அட்டை விவரங்களை பயன்படுத்தும் ஒரு அரசு சேவையின் இணைய பாதுகாப்பு அம்சங்கள் மிக மோசமாக உள்ளதாவும், அதனால் இந்திய மக்களின் பெயர்கள் மற்றும் ஆதார் எண் விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், கைரேகை, கருவிழி அடையாளம் ஆகியவை திருடப்பட வாய்ப்பில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே, ஆதார் விவரங்கள் திருடப்பட்டதாக பலமுறை செய்திகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் மீண்டும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த இணையதளம் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என ஆதார் விவரங்களை நிர்வகிக்கும் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்த இணையதளத்தில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது. அப்படியே அதில் கூறியுள்ள சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும், அது அந்த சேவை அமைப்பின் தவறாகும். மத்திய அரசின் ஆதார் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை" என கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைக்காக பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பயோ மெட்ரிக் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்!