இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஈஸ்டர் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள், ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி உள்பட 8 இடங்களில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 310 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 450-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.