இலங்கை சிறையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை விடுதலை செய்ய, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைதுசெய்வதும், தாக்குதல் நடத்துவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளவது என தொடர்ந்து வருகிறது. எனவே இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 


இதையடுத்து மத்திய அரசு, இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்யும் படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 30 மீனவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். உடனே அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற 8 மீனவர்களும் வருகிற 3-ம் தேதி மன்னார்கோட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர்.


38 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால் அவர்களுடைய விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. மீனவர்களின் வாழ்வாதராம் அதில்தான் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.