கென்யா வன்முறை 8 பேர் பலி; பலர் காயம்
கென்யாவில் மறுதேர்தல் நடந்ததை எதிர்த்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி கென்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, மறுதேர்தல் நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் கூறியதையடுத்து, நேற்று முன்தினம் மறுதேர்தல் நடந்தது. ஆனால் எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது.
மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவான 4 தொகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஆனாலும் வன்முறை மற்ற பகுதிக்கும் பரவியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுள்ளது.
ஆனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் வன்முறை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.