பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு!!
பிரிட்டன் பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லண்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பிரதமருக்கான போட்டியில் கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் நேரடியா போட்டி ஏற்ப்பட்டது. ஆனால் இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் தங்கள் வாக்கினை பதிவு செய்து கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். நேற்றுடன் தங்கள் வாக்கினை பதிவுச்செய்யும் கால அவகாசம் முடிந்தது.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதில் அதிக வாக்கு பெற்ற போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அறிவிகப்பட்டு உள்ளது.
அதாவது மொத்த வாக்குகளில் போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகளும், ஜெர்மி ஹண்டை 46,656 வாக்குகளும் பெற்றனர். கிட்டத்தட்ட 1,60,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். 87.4% வாக்குப்பதிவாகி இருந்தது. அதில் ஜான்சன் பெற்ற வாக்குகளின் சதவீதம் 66.4 ஆகும். இது 2005 ஆம் ஆண்டு டேவிட் கேமரூன் (67.6%) பெற்றதை விட சற்று குறைவாக இருந்தது.