கொரோனா வைரஸை கண்டுபிடித்த மருத்துவரையே தாக்கியது நோய்
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து டிசம்பர் மாதமே எச்சரித்த மருத்துவர் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து டிசம்பர் மாதமே எச்சரித்த மருத்துவர் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 65 பேர் உயிர் இழந்துள்ளனர். புதிதாக, 3,887 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை, 24 ஆயிரத்து, 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,219 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள, 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு
உள்ளது.
சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் மூலமே, இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவைச் சேர்ந்த, சீனாவின் வூஹானில் மருத்துவம் படித்து வரும் மூன்று மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிவரும் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக வங்கி கூறியுள்ளது. மேலும் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுமா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என, உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை, சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற டாக்டர், கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டார். இவர் சீனாவில் வூஹான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் வென்லியாங் வேலை செய்கிறார். அங்கு அவர் இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அங்குதான் முதலில் வைரஸ் பரவியது.
இவர் அங்கு பணியாற்றும் போது டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார்கள். இவர்களில், எட்டு பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இது குறித்த தகவல்களை சக டாக்டர்களுக்கு, டிசம்பர் 30ம் தேதி அனுப்பி உள்ளார். நோயாளிகளை கையாளும் போது பாதுகாப்புக்காக 'மாஸ்க்' அணிந்து கொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறித்தினார். இந்த தகவல்கள் இணையதளத்தில் வேகமாக பரவியதால், சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் லீ வென் லியாங்கை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தாண்டு, ஜனவரி 10 ஆம் தேதியில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு, வென்லியாங் சிகிச்சை அளித்துள்ளார். அதில், அவரையும், வைரஸ் தாக்கியது.தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டடு தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.