தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் Mask இல்லாமல் வெளியே செல்லலாம்: அமெரிக்காவில் புதிய விதிமுறைகள்
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையமான CDC, செவ்வாய்க்கிழமை முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் சிறிய புதுப்பிப்பை அளித்தது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க மக்களுக்கான முகக்கவச ஆலோசனையில் சில புதுப்பிப்புகள் அறிவிக்கப்பட்டன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், சிறிய கூட்டங்களை உடைய பொது நிகழ்வுகள் ஆகிய இடங்களில், தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் (Facemask) இல்லாமல் கலந்துகொள்ளலாம், பாதுகாப்பாக தொற்றுக்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்வை மீண்டும் துவக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும், திறந்தவெளி அல்லாத இடங்களிலும், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகளிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் சமீபத்திய தகவல் எச்சரித்துள்ளது.
சி.டி.சியின் புதிய ஆலோசனை படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு முகக்கவசங்கள் இல்லாமல் வெளியில் நடப்பதற்கும், ஜாக்கிங் செய்வதற்கும், மலையேற்றங்களுக்கும், பைக்கில் செல்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி (Vaccine) போட்டபின் சிறிய வெளிப்புறக் கூட்டங்களுக்குச் செல்வதற்கு முகக்கவசம் தேவையில்லை என்று சி.டி.சி கூறியது. ஆனால் தடுப்பூசி போடாத நபர்கள் கலந்திருக்கும் கூட்டங்களில் பங்குகொள்ளும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு நண்பர்களுடன் உணவகங்களில் உணவருந்தும்போது முகக்கவசங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
சி.டி.சியின் புதிய வழிகாட்டுதலின் படி, COVID-19 தடுப்பூசியின் இரண்டு பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களை செலுத்திக்கொண்ட நபர்கள் இனி நேரடி நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாகிறார்கள். மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும், அல்லது, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோசை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும் இந்த தளர்வுகளுக்கு தகுதி பெறுகிறார்கள் என்று சி.டி.சி அங்கீகரிக்கிறது. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு டோஸ் பொதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு - மருத்துவர் ஃபவுசி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகரும், சிறந்த தொற்று நோய் நிபுணருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கான சி.டி.சி-யின் புதிய முகக்கவச வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்தார். ஹார்வர்ட் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "தடுப்பூசிகளின் முழுமையான டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுக்கு COVID-19 நோய்த்தொற்றுக்கான ஆபத்து உண்மையில் மிகக் குறைவு." என்றார். "தடுப்பூசிகளின் முழுமையான டோஸ்களை போட்டுக்கொண்ட ஒருவர் திறந்த வெளியில் இருக்கும்போது அவருக்கு தொற்று பரவுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவாகவே உள்ளது" என்று அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில் "நீங்கள் மற்றவர்களிடமிருந்து விலகி திறந்த வெளியில் தனியாக இருக்கும்போதும், உங்கள் வீட்டில் வசிக்கும் நபர்களுடன் இருக்கும்போதும் முகக்கவசங்கள் தேவையில்லை." என்று சி.டி.சியின் ஆலோசனை தெளிவாகக் கூறியது.
சி.டி.சி இயக்குனர் வலென்ஸ்கி, தடுப்பூசி போட்டவர்களுக்கு, முகக்கவசம் இல்லாமல் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானதே என்று கூறினார். இருப்பினும், மிகவும் நெரிசலான வெளிப்புற இடங்கள் மற்றும் தனி மனித இடைவெளி போதுமானதாக இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை சி.டி.சி தொடர்ந்து பரிந்துரைக்கிறது.
ALSO READ: வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR