வடகொரிய அதிபர் கிம் ஜாங் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் 12-ஆம் நாள் வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்களை ஒழிப்பதற்காக அந்நாட்டு அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை ஒழிப்பது தொடர்பாகவும், இனி அந்நாட்டில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தாமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த திங்கள் அன்று உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தார். இந்த நேர்காணலில், அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை வடகொரிய அதிபர் எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.


மேலும் “வடகொரியாவை பொறுத்தவரை, நிறைய நல்ல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நான் வடகொரிய பிரச்சனையில் 3 மாதங்களாகத் தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் எனக்கு முன்னால் இருந்த அதிபர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவாகரத்தில் முயற்சித்து வந்தனர்” என அவர் குறிப்பிட்டார்.


வடகொரியா தனது ஏவுகணைகளை சோதிப்பு பணிகளை நிறுத்தியுள்ளதற்கு தான் ஒரு காரணமாக அமைந்திருப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில் வடகொரிய அதிபரை தான் மீண்டும் சந்தித்துப்பேச வாய்ப்புகள் உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர்கள் இருவருக்கு இடையில் நடந்த முதல் சந்திப்பு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.