மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்சு!
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
2001-ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்திய பாராளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதல் வரையில் இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பெருப்பேற்றுள்ளது.
இந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் என கூறப்படுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு கடந்த 2002-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது, எனினும் தற்போது பாகிஸ்தானில் செயல்பட்டுதான் வருகிறது.
சமீபத்தில் நடைப்பெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் நட்பு நாடான சீனா தடுத்தது.
இதற்கிடையே ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் இருக்கும் தொடர்பை பாகிஸ்தான் உறுதி செய்யும் வகையில் அந்நாட்டு அமைச்சர்,... "ஜெய்ஷ் அமைப்பிடம் கேட்டோம், ஆனால் புல்வாமா தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என கூறிவிட்டது" என தெரிவித்தார். மேலும் அசாருக்கு சிறுநிரக கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையே இந்திய விமானப்படை பலாகோட்டில் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது இயக்கம் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது பிரான்சில் உள்ள மசூத் அசார் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது. பிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.