இலங்கையின் 8 ஆவது அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்று, கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்றார். இதை தொடர்ந்து, தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான, மகிந்த ராஜபக்சேவின் பிறந்தநாளில் பதவியேற்க முடிவு செய்தார். இதன்படி, புத்தர் ஞானம் பெற்ற போதி மரக் கிளையிலிருந்து வளக்கப்பட்ட புனித மரம் அமைந்துள்ள அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகாபோதி ஸ்தலத்திலும், ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரிலும் மத வழிபாட்டில் ஈடுபட்டார்.


இதையடுத்து, ருவன்வெலி மகா சாய பெளத்த விஹார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கையின் 7ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கோத்தபய பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோரும், வெளிநாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர்.


இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அரசு அலுவலகங்களில், தனது படத்தையோ, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களையோ வைக்க கூடாது என முதல் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரபூர்வ கொடியாக, தூய்மையின் சின்னமான வெண்தாமரை மலர் பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு அதிபருக்கும், பிரத்யேக கொடிகள் அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையே, இலங்கை அதிபராக கோத்தபய பதவியேற்றுள்ளதை, அவரது பொதுஜன பெரமுனா கட்சியினர் கொண்டாடுகின்றனர். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு பால் சோறு மற்றும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.